நெல்லை மாவட்டத்தில் 13 இடங்களில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 13 இடங்களில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்களுக்கு ஊரக வாழ்வாதார இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மூலம் நடப்பு ஆண்டில் (2015-2016) ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் 13 இடங்களில் நடக்கிறது. அனைத்து முகாம்களும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடக்கிறது. வட்டாரம் வாரியாக விவரம், மாதம் வருமாறு, செப். 12 ஆம் தேதி ராதாபுரம் வட்டாரம். நாங்குநேரி வட்டாரம் - செப்டம்பர் மாதம். அக்டோபர் மாதம் - வள்ளியூர் வட்டாரம். கீழப்பாவூர், கடையம் வட்டாரங்கள்- நவம்பர் மாதம். தென்காசி, செங்கோட்டை - டிசம்பர் மாதம். பாப்பாக்குடி, ஆலங்குளம் - ஜனவரி மாதம். சேரன்மகாதேவி, களக்காடு - பிப்ரவரி மாதம். அம்பாசமுத்திரம் - மார்ச் மாதம். பாளை வட்டாரத்திற்கான முகாம் புதிய பஸ் ஸ்டாண்ட் மாவட்ட பூமாலை வணிக வளாகத்தில் அக்டோபர் மாதம் நடக்கிறது. முதன் முதலாக ராதாபுரம் வட்டாரத்தில் நடக்கும் முகாமில் ராதாபுரம் மற்றும் அதைச் சார்ந்த நகர்புற பகுதிகளின் இளைஞர்கள், வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் விண்ணப்ப படிவத்தை நேரடியாக பெற்று தங்கள் விபரங்களை பதிவு செய்து வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். அனைவரும் தங்களது கல்வி சான்று மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் உள்ளிட்ட இதர சான்றுகளுடன் பங்கேற்க வேண்டும். பிற வட்டாரங்களில் முகாம் நடக்கும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். இந்த முகாம்களில் 20 முன்னணி தனியார் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரிவதற்கு தேவையானவர்களை தேர்வு செய்ய உள்ளன. 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த ஐடிஐ, டிப்ளமோ பயிற்சி பெற்ற மற்றும் பெறாத 18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த ஊரக மற்றும் நகர்புற ஆண்கள், பெண்கள் முகாம்களில் பங்கேற்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments