Disaster in Maccah

ராட்சத கிரேன் விழுந்து பயங்கரம்: மெக்காவில் 87 பேர் பலி

* 9 இந்தியர் உட்பட 180 பேர் படுகாயம்
* கடும் சூறைக்காற்றால் நேர்ந்த விபரீதம்

ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா மசூதியில் கிரேன் சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 87 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. 9 இந்தியர் உட்பட 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். உலகின் அனைத்து பகுதியிலும் உள்ள இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்தாண்டுக்கான ஹஜ் பயணம் தற்போது தொடங்கி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து ஹஜ் யாத்திரைக்காக இஸ்லாமியர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். 

இந்நிலையில், புனித மெக்கா மசூதிக்கு வரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக மசூதியில் கட்டுமான பணியில் ராட்சத கிரேன்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. நேற்று அங்கு இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது, வீசிய திடீர் புயல் காற்றால் ராட்சத கிரேன் ஒன்று சரிந்து, மசூதியின் கூரை மீது விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை என்பதால் நேற்று மாலை தொழுகைக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். அவர்கள் மீது கிரேன் விழுந்ததில் பலர் சம்பவ இடத்திலேயே நசுங்கி பலியாயினர். தகவலறிந்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 

இந்த விபத்தில் 87 பேர் பலியாகி உள்ளதாக சவுதி அரேபிய சிவில் பாதுகாப்பு ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏராளமான ஆம்புலன்ஸ்கள் மசூதிக்கு விரைந்தன. படுகாயமடைந்தவர்களில் 9 பேர் இந்தியர்கள் என வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் சுவரப் கூறுகையில், ‘ஜெட்டாவில் உள்ள நமது தூதர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறார். தொடர்ந்து தகவல்களை சேகரித்து வருகிறோம்’ என்றார்.

இந்த விபத்து மாலை 6 மணி அளவில் நடந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மசூதியில் ஏற்பட்ட விபத்து தொடர்பான புகைப்படங்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உடனடியாக பரவத்தொடங்கியது. ஹஜ் பயணத்துக்கு உலகின் பல பகுதியிலிருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அங்கு நடந்துள்ள இந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விசாரணைக்கு உத்தரவு

மெக்கா மசூதியில் ஹஜ் யாத்திரை வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மசூதி வளாகத்தை விரிவாக்கம் செய்யும்பணி நடந்து வருகிறது. ஒரே சமயத்தில் 22 லட்சம் மக்கள் தொழுகையில் பங்கேற்கும் வகையில் 4.3 மில்லியன் சதுர அடி அளவுக்கு மசூதி வளாகத்தை விரிவாக்கம் செய்யும் பணி தற்போது நடக்கிறது. இப்பணியின் போதுதான் விபத்து நடந்தது. இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்த சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments