தமிழகம் முழுவதும் சீமைக்கருவேல மரங்களை அழிக்க முடிவு: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சீமைக்கருவேல மரங்களை அழிக்கவும், அந்த மரங்களால் ஏற்பட்ட பாதிப்பை ஈடுகட்டவும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யக் கோரி மதிமுக பொதுச் செயலர் வைகோ மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இம்மரங்களை வேரோடு அகற்றுமாறு 2013இல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்ட போதும் அரசு மெத்தனமாக இருந்தது. இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் தென் மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அனுப்பிய போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வைகோ, நேரில் ஆஜராகி வாதிட்டார்.
1960 ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவில் இருந்து தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்ட சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீர் மற்றும் ஆக்சிஜனை அதிக அளவு ஈர்த்து விவசாயம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றார். அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர் கே.செல்லப்பாண்டியன் ஆஜராகி, உயர்நீதிமன்ற உத்தரவின் படி சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளது. சீமைக்கருவேல மரங்களை வேரோடு அகற்ற அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
நீதிமன்றம் உத்தரவை சுட்டிக்காட்டி சீமைக்கருவேல மரங்களை அழிக்கக் கோரியதற்கு விருதுநகர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் பதில் அனுப்பியுள்ளனர்.
நான் வழக்கு தொடர்ந்த பிறகு தான் அரசு அவசரமாக ஆலோசனை நடத்தியுள்ளது என வைகோ தெரிவித்தார். இதையடுத்து, சீமைக்கருவேல மரங்களை எந்த வகையில் கூண்டோடு அகற்றலாம் என்பது குறித்து நீதிமன்றத்துக்கு ஆலோசனைகள் கூறவிரும்புவோர் கூறலாம் எனக் கூறிய நீதிபதிகள், உயர்நீதிமன்ற உத்தரவின்படி சீமைக்கருவேல மரங்களை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் 13 தென்மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணை அக்.6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
0 Comments